Plan 6 months ahead for flight bookings from SG/MY/UAE.
கோயில் பற்றி
உ தோற்றுவாய் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று மும்முறை ரிக்வேதம் தெரிவிக்கின்றது. சுப்ரமண்ய எனும் சொல் பரமசொரூபத்தைக் குறிப்பதாகும். சுப்பிரமணியர் எனும் பெயருக்குச் சிறந்த வேதங்களுக்குத் தலைவன் என்பது பொருளாம். முக்கட் பகவனின் இளைய திருவுருவாய் அடியார் பெருமக்களால் வணங்கப்படும் தெய்வமாய் முருகப் பெருமான் திகழுகின்றார். உயிர்கள் உய்யும் பொருட்டு இப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்கள் பலவாகும். அவற்றுள் வல்லக்கோட்டை எனும் திருத்தலமும் ஒன்றாகும். இதன் சிறப்புகளை இங்கு அறிந்துகொள்வோம். அமைவிடம் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதுாரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் ஒரகடம் செல்லும் வழியில் உள்ள வல்லக்கோட்டை எனும் சிற்றுாரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவிலும் செங்கல்பட்டிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும் இத்தலம் உள்ளது. பகீரதன் அரசாட்சி பெற்ற வரலாறு முற்காலத்தில் இயற்கை எழில்சூழ்ந்த இலஞ்சி எனும் தேசமொன்றிருந்தது. அதன்கண் இருந்த சலங்கொண்டபுரம்...எனும் ஊரினை இஷ்வாகு குலத்தரசன் பகீரதன் என்பான் அரசுபுரிந்து வந்தான். தனது நாட்டில் நிலவிய செல்வ வளத்தினால் அவன் மிகுந்த கர்வத்துடன் திகழ்ந்தான். ஒரு சமயம் அவனது சபைக்கு திரிகால ஞானியாகிய நாரத முனிவர் வந்தனர். அவரை மன்னன் உபசரிக்கவில்லை. கோபமுற்ற முனிவர் மன்னனுக்குப் பாடம் கற்பிக்க எண்ணி அங்கிருந்து அகன்றார். அவ்வமயம் அருகேயுள்ள ஒரு கானகத்தின் வழியே கோரன் எனும் அசுரனொருவன் திக்விஜயம் சென்று கொண்டிருந்தான். நாரத முனிவர் அவனிடம் சென்று, நீ பலநாடுகளை வென்றிருந்தாலும். இலஞ்சி எனும் நாட்டினை வென்றால் மட்டுமே உனது திக்விஜயம் பூர்த்தியாகும் என்றனர். அதனைக் கேட்ட அசுரன் கர்ஜித்தான். உடனே தனது படைகளைத் திரட்டிக்கொண்டு இலஞ்சி மீது போர் தொடுத்து பகீரதனின் நாட்டை அழித்தான். அவனுக்குப் பயந்து மன்னன் கானகத்திற்குள் சென்று ஓடியொளிந்தான். அசுரனால் நாடு, நகரம் அனைத்தையும் இழந்து வறியவனாகினான். பிறகு தனது நிலையையெண்ணி வருந்திய மன்னன் கர்வத்தை விடுத்தான். அவ்வமயம் அவனெதிரே நாரதமுனிவர் தோன்றி, துர்வாச முனிவரிடம் சென்று உபாயங்கேட்குமாறு கூறியருளினார். மன்னன் நாரதரை வணங்கி விடைபெற்றுச்சென்று தொண்டை மண்டலத்தை அடைந்தான். அங்கு துர்வாச முனிவரின் ஆசிரமத்தை அடைந்து, அவரிடம் தனது நிலையை விளங்க உரைத்து தனது நாட்டினை மீட்பதற்கான வழியைக் கூறியருளுமாறு வணங்கி வேண்டினான். அருகிலுள்ள பாதிரி மரத்தினடியில் முருகப்பெருமானைப் பூஜித்து வருமாறு துர்வாசர் உபாயங் கூறியருளினார். அவ்வாறே மன்னன் பாதிரி மரத்தை அடைந்து முருகப்பெருமானை இருதயகமலத்தில் இருத்திப் பூஜித்து தவஞ்செய்து வருகையில், ஒரு சித்திரைத் திங்கள் சுக்கிரவாரத்தில் முருகப் பெருமான் காட்சியருளி அவனுக்கு மீண்டும் அரசுரிமை கிடைக்குமாறு வரமருளினார். மன்னன் பெருமகிழ்வுற்று பெருமானை வணங்கினான். பின்னர் தனது நாட்டை அடைந்து அசுரனைப் போரில் வென்று அரசாட்சியை மீண்டும் பெற்றான். அதன் பிறகு அவன் தொண்டை மண்டலத்தை மீண்டும் அடைந்து தனக்குத் திருவளுள் செய்த முருகப்பெருமானுக்கு ஒரு திருக்கோயிலைக் கட்டுவித்து திருவிழாக்கள் நிகழ்த்தினான். இவ்வாறு பகீரத மன்னனுக்கு இழந்த அரசாட்சியை மீண்டும் அளித்தருளிய சிறப்புக்குரியவராய் வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி அருள்பாலித்து வருகிறார். இங்கு இந்திரன் வந்து பூஜித்த வரலாற்றை இனி அறிந்து கொள்வோம். இந்திரன் பூஜித்த வரலாறு ஒரு சமயம் இந்திரன் தனது குருவாகிய பிருகஸ்பதியிடம் சென்று முருகப்பெருமானின் சிறந்த ஒரு தலத்தை கூறியருளுமாறு வினவினான். அதற்குப் பிருகஸ்பதி, பூவுலகில் தொண்டை மண்டலத்தின்கண் பாதிரி மரத்தின்கீழ் வீற்றிருக்கும் முருகப்பெருமானின் தலமே உத்தமமானது என்று கூறியருளினர். அதன்படி இந்திரன் இத்தலத்திற்கு வந்து வச்சிராயுதத்தினால் ஒரு தீர்த்தமுண்டாக்கி அத்தீர்த்தத்தைக் கொண்டு சுப்பிரமணியக் கடவுளை அபிஷேகித்தும், பாதிரி மலர்களால் பூஜித்திருந்தும் தனது விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டான். பிறகு இந்திராணியை மணந்து சிறப்புற்றான். இந்திரன் உண்டாக்கிய இத்தீர்த்தம் வச்சிரதீர்த்தம் எனும் பெயருடன் இந்த ஆலயத்தையொட்டி கீழ்திசையில் உள்ளது. வல்லன் வதம் வரலாறு பின்பொரு சமயம் வல்லன் எனும் அசுரனொருவன் இந்த ஊரினைத் தனது வசமாக்கிக் கொண்டு மக்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்களுக்கும் தீராத தொல்லைகளைக் கொடுத்து வந்தான். அவனது கொடுமைகளுக்கு அஞ்சிய தேவர்கள் முருகப்பெருமானிடம் சரண்புகுந்து வேண்டினர். பெருமான் தேவர்களுக்கு அபயம் அளித்து தனது வேலாயுதத்தை விடுத்து வல்லனை வதஞ்செய்தார். அசுரன் உயிர் பிரியுஞ்சமயம் நற்புத்தி வரப்பெற்று, இந்த ஊர் இனி தனது பெயரால் விளங்குமாறு அருள் செய்திட வேண்டும் என்று வேண்டினான். பெருமானும் அவ்வாறே வரமருளினார். அதனால் இத்தலத்திற்கு வல்லன்கோட்டை என்று பெயர் வழங்கப்பட்டு தற்போது வல்லக்கோட்டை என்று அழைக்கப்படுகின்றது. அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய வரலாறு புராணச்சிறப்பு கொண்ட இத்தலத்திற்கு ஞானிகள் பலரும் வந்து அருள் பெற்றுள்ளனர். ஒரு சமயம் அருணகிரிநாதர் திருப்போரூர் கந்தப் பெருமானை வழிபட்டு அங்கு இரவு தங்கினார். காலையில் தணிகை முருகனை வழிபடச் செல்லலாம் என எண்ணியபடியே உறங்கினார். நான்காம் யாம இரவு வேளையில் அவரது கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி கோடைநகர் மறந்தனையோ என்றுணர்த்தினார். மறுநாள் கண்விழித்த அருணகிரியார் கந்தனை நினைத்து கசிந்துருகி, பிறகு வல்லக்கோட்டை தலத்தை அடைந்து சுப்பிரமணியப் பெருமானைக் கண்குளிர கண்டு வணங்கி எட்டு திருபுகழ் பாடல்களைப் பாடியருளினார். அவர் இத்தலத்தினைக் கோடை நகர் என்றும் பெருமானைக் கோடைப்பதியோன் என்றும் சந்தக் கவிகளால் பாடியருளினார். தலவிருட்சம் இந்தத் திருக்கோயிலின் தலவிருட்சம் பாதிரி மரமாகும். இதன் சிறப்பினைச் சங்க இலங்கியங்கள் தெரிவிக்கின்றன. இது சித்திரையில் மலரும் சிறப்புடையது. இதன் இதழ்கள் குழாய் போன்று வளைந்திருப்பதால் இதனைக் கூன் மலர் என்பர், அம்புவாகினி, பாடலம், புன்காலி முதலிய பிற பெயர்களும் இந்த மலருக்கு உண்டு. இதன் இதழ்கள் வெண்மை, மஞ்சள், செம்மஞ்சள் நிறமுடையது. சிறப்பு பொருந்திய இந்த மரத்தினருகில் முருகப்பெருமான் பகீரத மன்னனுக்குக் காட்சியருளினார். ஆலய சிறப்புகள் இந்த ஆலயத்தில் முருக்பெருமான் 7 அடி உயரங்கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு முகமாய் அருள்பாலிக்கின்றனர் ஆலய பிரகாரத்தின் தென்மேற்கு திக்கில் முக்கால கணபதி சந்நிதி உள்ளது. மூன்று காலங்களிலும் நேரும் பாவங்களையும் விக்கினங்களையும் போக்கும் மூன்று கணபதிகள் ஒரே சந்நிதியில் இங்கு அருள்பாலிப்பது சிறப்பாகும். மேற்கு பிரகாரத்தில் உற்சவர் சந்நிதியும், இதனருகே தலமரமாகிய பாதிரியும், வடமேற்கு திக்கில் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமானின் சந்நிதியும் உள்ளது. பிரகாரத்தின் கிழக்கில் இடும்பன், கடம்பன், பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன. பூஜைகள் உற்சவங்கள் இங்கு நாள்தோறும் 6 கால பூஜைகள் காமிக ஆகமத்தின்படி நடைபெறுகின்றன. காலை 8 மணி, 10மணி, மாலை 5 மணி ஆகிய மூன்று வேளையில் அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரைத் தமிழ் வருடப் பிறப்பு உற்சவம் இங்கு விமரிசையாக நடைபெறுகின்றது. அன்று மூலவரும் உற்சவரும் முத்தங்கி சேவையில் காட்சியருளுவது சிறப்பு. வைகாசி விசாகம், வைகாசி பிரம்மோற்சவம், ஆடிக்கிருத்திகை. ஆடிப்பூரம்,1008 பால்குட அபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், ஆங்கில வருடப்பிறப்பு, தைத்கிருத்திகை, தைப்பூசம், மாசி இலட்சார்ச்சனை, பங்குனி உத்திரம் ஆகிய உற்சவங்கள் சிறப்புடன் இங்கு நடைபெறுகின்றன. வழிபாட்டுப்பலன் இத்திருக்கோயிலுக்கு ஆறு வாரங்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமை நாட்களில் வந்து வணங்குவோருக்கு இழந்த பதவிகள், நிறைவான செல்வங்கள், திருமணப்பேறு ஆகியவை கிடைக்கும். உண்டியல் காணிக்கை, முடி காணிக்கை, துலாபாரம் காணிக்கை, காவடி எடுத்தல், அலகு குத்துதல் ஆகிய பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகின்றன. சிறப்புகள் பல பொருந்திய இந்த ஆலயத்திற்கு நாமும் வந்து வணங்கி நற்பலன்கள் பெற்று உயர்வோமாக.
தல வரலாறு
ஸ்தல வரலாறு இத்திருத்தலம் சுமார் 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழமையானது. இலஞ்சி என்னும் தேசத்தில் சலங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இம்மன்னனை காண நாரதமகரிஷி ஓரு முறை வர அம்மன்னன் மிக்க ஆணவதினால் மகரிஷியை அவமதித்தான். மிக்க கோபத்துடன் மகரிஷி வனத்திற்குச் சென்றார். திக்விஜயம் செய்துவரும் அசுரன் கோரனை மகரிஷி கண்டு கர்வம் கொண்டுள்ள பகீரத மன்னனை வென்றால் உனது திக்விஜயம் பூத்தியாகும் என்று சொல்லி சென்றார். அவ்வரசன் கோரன் பகீரத மன்னனை போரில் சென்றான். அனைத்தும் இழந்த பகீரத மன்னன் கானகம் சென்றான். அங்கு நாரதமகரிஷி வருவதை கண்டு விழ்ந்து வணங்கி என்னை மன்னித்து நல்வழிகாட்டிடுங்கள் என்று வேண்டினான். நாரதமகரிஷி மனம் மகிழ்ந்து துர்வாச முனிவரிடம் சென்று வணங்கி... இத்திருத்தலம் சுமார் 1200ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப்பழமையானது. இலஞ்சி என்னும் தேசத்தில் சலங்கொண்டபுரம் என்னும் நகரை பகீரதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இம்மன்னனை காண நாரதமகரிஷி ஓரு முறை...வர அம்மன்னன் மிக்க ஆணவதினால் மகரிஷியை அவமதித்தான். மிக்க கோபத்துடன் மகரிஷி வனத்திற்குச் சென்றார். திக்விஜயம் செய்துவரும் அசுரன் கோரனை மகரிஷி கண்டு கர்வம் கொண்டுள்ள பகீரத மன்னனை வென்றால் உனது திக்விஜயம் பூத்தியாகும் என்று சொல்லி சென்றார். அவ்வரசன் கோரன் பகீரத மன்னனை போரில் சென்றான். அனைத்தும் இழந்த பகீரத மன்னன் கானகம் சென்றான். அங்கு நாரதமகரிஷி வருவதை கண்டு விழ்ந்து வணங்கி என்னை மன்னித்து நல்வழிகாட்டிடுங்கள் என்று வேண்டினான். நாரதமகரிஷி மனம் மகிழ்ந்து துர்வாச முனிவரிடம் சென்று வணங்கி நல்வழிகாட்டிடுங்கள் என்று முறையிட்டான்.துர்வாச முனிவரின் உபதேசப்படி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து பாதிரி மரத்தடியில் முருகப்பெருமானை வழிப்பட்டு அழியாப்பேறு பெற்றான். அம்மன்னன் அமைத்த ஆலயமே வல்லக்கோட்டை இத்திருத்தலத்தில் உள்ள ஆலயமாகும்.அவன் வழிபட்ட மூர்த்தியே வள்ளி தெய்வானை தேவியர்களுடன் கூடிய கோடையண்டவர் . திருத்தலத்தின் பெயர் முன்னொரு காலத்தில் வல்லன் என்ற அசுரனின் கோட்டையாக இவ்வூர் இருந்தது. அவ்வரசன் தேவர்களுக்கு பல கொடுமைகளை செய்து வந்தான். தேவர்கள் முருகப்பெருமானிடம் சென்று வீழ்ந்து வணங்கி அசுரனின் கொடுமைகளை கூற அசுரன் அழியும் நேரம் வந்து விட்டது, அஞ்சற்க என்று அபயம் கொடுத்தார். அசுரனை வதஞ்செய்து பின்பு அவ்வசுரனின் வேண்டுகோளுக்கிணங்க இவ்வூர் வல்லன் கோட்டை என்று திகழும் என்றார். அதுவே காலபோக்கில் வல்லக்கோட்டை என மருவியது. அருணகிரிநாதர் சுவாமிகள் கூறும் கோடை நகரம் அருணகிரிநாத சுவாமிகள் தலயாத்திரை செய்து வருகையில் திருப்போரூர் முருகனை வழிபட்டு இரவு தங்கினார். காலையில் திருத்தணிகை செல்லலாம் என்று நினைத்து கொண்டு படுத்து உறங்கினார். கோடை நகர் குமரன் அவரது கனவில் தோன்றி வல்லக்கோட்டையினை மறந்தனையே என்று சொல்லி மறைந்தார். ஸ்ரீ அருணகிரிநாதரும் கண்விழித்து கனவில் கண்ட முருகனை நினைத்து அகமகிழ்ந்து திருத்தணிக்கு செல்லுகையில் வல்லக்கோட்டை ஸ்தலத்திற்கு வந்து முருகப்பெருமானுக்கு எட்டு திருப்புகழ் பாமாலை பாடி சூட்டினார். முதல் திருப்புகழ் ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து ஆகமல மாகி நின்று புவிமீதில் ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து ஆளழக னாகி நின்று விளையாடிப் பூதல மெலாம லைந்து மாதருட னே கலந்து பூமிதனில் வேணு மென்ற பொருள்தேடிப் போகமதி லேயு ழன்று பாழ் நரகெய் தாம லுன்றன பூவடிகள் சேர அன்பு தருவாயே சீதைகொடு போகு மந்த ராவணனை மாளவென்ற தீரனரி நார ணன்றன் மருகோனே தேவர் முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று தேடஅரி தான வன்றன் முருகோனே கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற கோமளிய நாதி தந்த குமரேசா கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட கோடை நகர் வாழ வந்த பெருமாளே இரண்டாம் திருபுகழ் சால நெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து சாமளவ தாக வந்து புவி மீதே சாதகமு மான பின்பு சீறியழு தேகிடந்து தாரணியி லேத வழ்த்து விளையாடிப் பாலனென வேமோ ழிந்து பாகு மொழி மாதர் தங்கள் பாரதன மீத ணைந்து பொருள்தேடிப் பார்மிசையி லேயு ழுன்று பாழ்நர கெய் தாம லொன்று பாத மலர் சேர அன்பு தருவாயே ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள் ஆதி முதல் நார யனறன் மருகோனே கோலமகர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ் மடந்தை கோவையமு தூற லுண்ட குமரேசா கூடிவரு சூர டங்க மாளவடி வெலெறிந்த மூன்றாம் திருபுகழ் ஏறா னாலே நீறாய் மாயா மேளே வாசக் கணையேலே ஏயா வேயா மாயா வேயா லாமே ழோசைத் தொளையாலே மாறா யூறா யீறாய் மாலாய் வாடா மானைக் கழியாதே வாராய் பாராய் சேரா யானால் வாடா நீபத் தொடை தாராய் சீறா வீறா ஈரெழ் பார்சூழ் சீரார் தோகைக்குமரேசா தேவா சாவா மூவாநாரா தீரா கோடைப் பதியோனே வேறாய் மாறா யாறா மரசூர் வேர்போய் வீழப் பொருதோனே வேதா போதா வேலா பாலா வீரா வீரப் பெருமாளே நான்காம் திருப்புகழ் ஞால மெங்கும் வளைத்தரற்று கடலாலே நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் வசையாலே ஆல முந்து மதித்த ழுற்கும் அழியாதே ஆறி ரண்டு புயத் தணைக்க வருவாயே கோல மொன்று குறத்தி யைத்த ழுவுமார்பா கோடை யம்பதி யுற்று நிற்கு மயில் வீரா கால னஞ்ச வனரத் தொளைத்த முதல் வானோர் கால்வி லங்கு களைத்த றிந்த பெருமாளே ஐந்தாம் திருப்புகழ் தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள் ஓதிய நன்றிம றந்த குண்டர்கள் சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் பெரியோரை தூஷண நிந்தைய கர்ந்த குண்டர்கள் ஈவது கண்டுத கைந்த குண்டர்கள் சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் தொலையாமல் வாழிநி னைந்துவ ருந்து குண்டர்கள் நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள் மாவை கந்தைமி குந்த குண்டர்கள் வலையாலே மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள் தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள் வாதைந மன்றனவ ருந்தி டுங்குழி விழுவாரே ஏழு மரங்களும் வங்கு ரங்கெனும் வாலியு மம்பர மும்ப ரம்பரை ராவண னுஞ்சது ரங்க லங்கையு மடைவேமுன் ஈடழி யும்படி சந்தர னுஞ்சிவ சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற ராம சரந்தொடு புங்க வந்திரு மருகோனே கோழி சிலம்பந லம்ப யின்றக லாப நடஞ்செய் மஞ்சு தங்கிய கோபுர மெங்குவி ளங்கு மங்கல வயலூர் கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் வேல னெனும் பெய ரன்பு டன்புகழ் கோடை யெனும்பதி வந்த இந்திரர் பெருமாளே ஆறாம் திருப்புகழ் தோடப் பாமற் றோய்தப் பாணிச் சூழ்துற் றார்துற் றழுவாருந் தூரப் போகக் கோரப் பாரச் சூலப் பாசச் சமனாரும் பாடைக் கூடத் தீயிற் றேறிப் பாழ்பட டேபட் டழியாதே பாசத் தேனைத் தேசுற் றார்பொற் பாதத் தேவைத் தருள்வாயே ஆடற் சூர்கெட் டோடத் தோயத் தாரச் சீறிப் பொரும்வேலா ஆனைச் சேனைக் கானிற் றேனுக் காரத் தாரைத் தரும்வீரா கூடற் பாடித் கோவைப் பாவைக் கூடப் பாடித் திரிவோனே கோலச் சாலிச் சோலைச் சீலக் கோடைத் தேவப் பெருமாளே ஏழாம் திருப்புகழ் வாசித்தநூல் மதங்கள் பேசிக் கொடா தவிந்து வாய்மைப்ர காச மென்று நிலையாக மாசிக்கபால மன்றில் நாசிக்கு ளோடுகின்ற வாயுப்பிராண னொன்றி மடை மாறி யோசித்த யாருடம்மை நேசித்துறு தலைந்து ரோமத்து வார மெங்கு முயிர்போக யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு லோகத்தில் மாய்வ தென்று மொழியாதோ வீசப்ப யோதி துஞ்சி வேதக்கு லால னஞ்ச மேலிட்ட சூர்தடிந்த கதிர்வேலா வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னாலம் யங்கி வேடிச்சி காலி லன்று விழுவோனே கூசிப்பு காவொ துங்க மாமற்றி காதரிந்த கூளப்பு ராரி தந்த சிறியோனே கோழிப்ப தாகை கொண்ட கோலக்குமார கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே எட்டாம் திருப்புகழ் பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் தருமாயப் படுகுழிபுக் கினிதேறும் வழி தடவித் தெரியாது பழமைபிதற் றிடுலோக றிடுலோக முழுமூடர் உழலும் விருப் புடனோது பாசவலைக் கலைதேடி யொரு பயனைத் தெரியாது விளியாமுன் உன்கமலப் பத நாடி யுருகியுளத் தமுதூற உனது திருப் புகழோத அருள்வாயே தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு திடுதிடெனப் பலபூதர் விதமாகத் திமி திமெனப் பொருசூர னெரு நெறனப் பலதேவர் ஜெய ஜெயெனக் கொதி வேலை விடுவோனே அழகுதரித் திடூநீப சரவணவுற் பவவேல அடல் தருகெற் சீதநீல மயில்வீரா அருணைதிருத் தணிநாக மலைப்பழினிப் பதிகோடை அதிய இடைக்கழிவேவு பெருமாளே திருக்குளத்தின் மகிமை இந்திரன் தமது குலகுருவாகிய பிருகஸ்பதியிடம் முருகனை வழிபடுவதற்கு உத்தமமான தலம் எது என்று கேட்க, பிருகஸ்பதியும் பூலோகத்தில் இருக்கும் வல்லக்கோட்டை தலம் மிக மேலானது என்று சொன்னார். உடன் இந்திரன் இத்தலத்திற்கு வந்து தனது வஜ்ஜிராயுதத்தை ஊன்றி திருக்குளம் உண்டாக்கி இத்தீர்த்தத்தினால் முருகனுக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வணங்கி இஷ்ட சித்தி பெற்றுச் சென்றான். வஜ்ஜிராயுதத்தால் உண்டாக்கினபடியால் வஜ்ரதீர்த்தம் என்ற பெயர் உண்டாயிற்று. இத்தலத்திற்கு செல்லும் மெய்யன்பர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கி ஆறு எழுத்து மந்திரத்தை ஓதி ஓம் சரவணபவ என்று சொல்லி கோடையாண்டவரை தரிசித்தால் வினைகள் எல்லாம் நீங்கப் பெற்று பேரின்பம் பெறுவது உண்மை.
🌐
NRI & Diaspora Traveler's Guide
Recommended Hub: Chennai (MAA)
💡 Chennai is the primary international gateway with direct connections from Riyadh, Dubai, and Singapore.
From Trichy (TRZ)270 km
From Chennai (MAA)29 km
Regional Transit Tips:
🇸🇬 Singapore/Malaysia: Direct flights via AirAsia or Scoot to Chennai (MAA). Look for 'NRI Special Darshan' quotas if applicable.
🇸🇦 Middle East: Major carriers like Emirates and Air Arabia connect to Chennai (MAA) via Hubs. Pre-book 'Temple Cabs' for reliable airport pickup.
📜 Pro Tip: Carry your OCI/Passport copy. Many temples offer faster 'Special Entry' lanes for overseas devotees.
மார்கழி முக்கோடி கிருத்திகை முக்கோடி கிருத்திகை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் இரத்தினாங்கி சேவையில் காட்சி
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.
இத்திருக்கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை நாளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கமாகும். இங்கு வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், நலமான வாழ்வு ஆகியன கிடைப்பதால் நாளுக்குநாள் பக்தர் வருகை அதிகரித்து வருகிறது.
மார்கழி மாதம் வரும் கிருத்திகையினை முக்கோடி கிருத்திகை என்பர். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை முக்கோடி கிருத்திகையினை முன்னிட்டு இத்திருக்கோயிலில் மூலவர் ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் உற்சவர் கோடையாண்டவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மூலவர் மலர் அலங்காரத்திலும் உற்சவர் கோடையாண்டவர் இரத்தினாங்கி சேவையிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முக்கோடி கிருத்திகையினை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்திருந்து அரோகரா கோஷமிட்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை காஞ்சிபுரம் உதவி ஆணையரும் தக்காருமான லஷ்மிகாந்த பாரதிதாசன், கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
பாலாலயம் இத்திருக்கோயில் திருப்பணி தொடங்க 30.03.2022 அன்று பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டு பாலாலயத்தில் கலந்துகொள்ள ஸ்ரீபெரும்புதுார் சட்ட மன்ற உறுப்பினர் அவர்களையும் மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் அவர்களையும் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்படுகிறது.
சுதந்திர தினம் பொது விருந்து-2023 ஆகஸ்டு 15.08.2023 அன்று சுகந்திர தினம் பொது விருந்து 1. புழுங்கல் அரிசி சாதம்
2. கத்திரிக்காய், , முருங்கை காய் சாம்பார்
3.தக்காளி ரசம்
4.மணத்தகாளி வத்த குழம்பு
5.சேனை சாப்ஸ்
6. புசணி புளிப்பு கூட்டு
7.அப்பளம்
8.மோர்
9.ஊறுகாய்
10. பருப்பு நெய்
11.மசால் வடை
2023 ஆண்டு 7வது சுதந்திர தின விழா 15.08.2023 திங்கட்கிழமை சுதந்திர திருநாள் இத்திருக்கோயிலில் சாதி, சமய வேறுபாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து - பகல் 12.30 மணியளவில் சிறப்புடன் நடத்தப்பட்டது.
இலவச திருமணம் 07.07.2023 இணை ஆணையர் அவர்கள் மற்றும் உதவி ஆணையர். செயல் அலுவலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இலவச திருமணம் சிறப்பாக நடைபெற்றது.