⏰ நேரங்கள் (Timings)
திறந்திருக்கும் நேரம் (Opening Timings):
05:30 AM to 03:00 PM
03:00 PM to 08:30 PM
தரிசன நேரம் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
சனி, ஞாயிறு, பௌர்ணமி, விடுமுறை நாட்களில் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாட்களில் இரவு 7.45 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
தரிசனத்திற்கு வருகைபுரியும் பக்தர்கள் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, கிழக்கு இராஜகோபுரம் மற்றும் வடக்கு அம்மனிஅம்மன் கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
பூஜை நேரங்கள் (Pooja Timings):
1. கோ பூஜை : 05:00 AM to 05:15 AM IST
2. உஷக்கால பூஜை : 05:30 AM to 07:00 AM IST
3. காலசந்தி பூஜை : 08:00 AM to 09:30 AM IST
4. உச்சிக்கால பூஜை : 10:00 AM to 11:30 AM IST
5. சாயரட்சை பூஜை : 05:30 PM to 07:00 PM IST
6. இரண்டாம்கால பூஜை : 08:00 PM to 09:00 PM IST
7. அர்த்தஜாம பூஜை : 09:00 PM to 09:30 PM IST
🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)
மூலவர் சுவாமி (Moolavar Swamy): அருள்மிகு அண்ணாமலையார்
மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு உண்ணாமுலையம்மை
ஸ்தல விருட்சம் (Sacred Tree): மகிழ மரம்
ஆகமம் (Tradition): காமிக ஆகமம்
கருவறை வடிவம் (Sanctum Shape): சதுர வடிவம்
🏠 முகவரி விவரங்கள் (Address Details)
மாவட்டம் (District): திருவண்ணாமலை
தாலுகா (Taluk): திருவண்ணாமலை
தொலைபேசி (Phone): 04175252438
முகவரி (Address):
சன்னதி தெரு, திருவண்ணாமலை., திருவண்ணாமலை, 606601
✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview) பாரம்பரிய கோயில் ✅
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு அருள்மிகு அண்ணாமலையார் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 6th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும் (Traditional Heritage Temple). ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.
📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)
Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️
🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)
Tiruvannamalai (5 km), Arni (54 km), Villupuram (59 km), Panruti (75 km)
📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)
வரலாற்று தகவல் (Historical Information):
ஆகமம் : காமிக ஆகமம்
பாடல் பெற்றது : சைவ நால்வர்
புலவ அருளாளர் : மாணிக்கவாசகர்
ஸ்தல விருட்சம் : மகிழ மரம்
விமானம் வகை : ஆனந்த விமானம்
கருவறை வடிவம் : சதுர வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 6th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : சோழன்
பாரம்பரிய கோயிலா : Yes
தல சிறப்பு (Thiruthala Special):
புராதனம்
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்
மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்
தூமாமழைநின்ற திரவெருவித்தொறுவின் நிரையோடும்
ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோள் சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால் நினையுமா நினைவி லேனே.
வட்ட னைம்மதி சூடியை வானவர்
சிட்ட னைத்திரு வண்ணா மலையனை
இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.
பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே அண்ணாமலையானே
ஊனைக் காவல் வைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை யாம்பாடக் கேட்டேயும்
வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
உலையிலன லொத்த வுடலினனல் பற்றி
யுடுபதியை முட்டி யமுதூற
லுருகிவர விட்ட பரமசுக முற்று
வுனதடியை நத்தி நினையாமற்
சிலைநுதலி லிட்ட திலதமவிர் பொட்டு
திகழ்முகவர் முத்து நகையாலே
சிலுகுவலை யிட்ட மயல்கவலை பட்டுத்
திருடனென வெட்கி யலைவேனோ
கலைகனக வட்ட திமிலைபறை கொட்ட
கனகமயில் விட்ட கதிர்வேலா
கருதலரின் முட்டிக் கருகிவரு துட்ட
கதுவமண ருற்ற குலகாலா
அலைகடலு டுத்த தலமதனில் வெற்றி
அருணைவளர் வெற்பி லுறைவோனே
அசுரர்களை வெட்டி யமரர்சிறை விட்டு
அரசுநிலை யிட்ட பெருமாளே.
வரலாற்று சிறப்பு
தென்னிந்தியாவில் மிகபுராதனமானதும், கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை நிறைந்ததும், பாடல்பெற்ற திருத்தலமாகவும் சிறந்து விளங்கும் இத்திருக்கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோழ, ஹெய்சாள மற்றும் விஜய நகர நாய்க்க மன்னர்களால் சுமார் 24 ஏக்கர் நிலபரப்பில் 9 கோபுரங்கள், 5 பிரகாரங்களுடன் மிகபெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலின் பிரதான நுழைவு வாயிலாக அமைந்துள்ள கிழக்கு இராஜகோபுரம் 217 அடி உயரம், 13 நிலைகள் மற்றும் 13 கலசம் கொண்ட தென்னிந்தியாவிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரால், இக்கோபுரம் கட்டப்பட்டது.
வல்லாள மகாராஜன் வரலாறு : குழந்தை பேறின்றி வருந்திய போசள அரசர் வீரவல்லாள தேவர்க்கு அண்ணாமலையார் குழந்தையாக தோன்றி, மன்னர் சொற்காராயின பிற்பாடு அவருக்கு ஒருமகன் இயற்ற வேண்டிய ஈமக் கிரியைகள் தானே இன்றளவும் செய்து வருகிறார். இது மாசி மாதம் பள்ளிகொண்டாம்பட்டு என்னும் ஊரில் நிகழ்கிறது மற்றும் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராய மகாராயர் தொண்டை மண்டலத்தில் இருந்த சைவ சமயக் குரவர்களின் ஒப்புதலோடு இத்திருக்கோயிலில் தற்போது 1000 கால் மண்டபம் அமைந்துள்ள இடத்தில், அன்றிருந்த சைவ சமய மடத்திற்கு மாற்று இடமளித்து, அகற்றிய அவ்விடத்தில் தற்போதுள்ள 1000 கால் மண்டபம், வசந்தன் திருக்கும், 13 நிலை கோபுரம் ஆகியவற்றை கட்டினார் என்று ஒரு செப்பேடு குறிப்பிடுகிறது.
இத்திருக்கோயிலின் தெற்குப்புறமுள்ள கட்டை கோபுரத்தை ஒட்டி மேற்கு நோக்கிச் செல்லும் 4-ம் பிரகாரச் சுவரில் வரையப்பட்டுள்ள கல்வெட்டு, இவ்வூரில் சுமார் 17-ம் நூற்றாண்டு காலத்தில் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டு இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ள மதில் சுவர் அடியோடு இடிந்து விழுந்துபட்டதையும், பின்பு இச்சுவற்றை திருவெடுத்துக் கட்டியமையையும் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக இவ்வுலகிற்கு எடுத்துக் கூறுகின்றது. தாழம்பூவை பொய்சாட்சியாக வைத்து முடியை கண்டதாக பொய்யுரைத்தார் பிரம்மா அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயம் இல்லாமல் போனது என்ற தொன்மமும், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவபெருமான் தன்னுடைய இடபாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராய் நின்ற பெருமைக்குரிய தலம் இத்தலம். திருவண்ணாமலை நினைக்க முக்தி அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் இத்தலம். இத்தலத்தில் நால்வர்கள் பதிகங்கள் பதிகங்களாக பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பாடல்களையும் இயற்றியுள்ளார். கிரிவலப்பாதையில் அடிஅண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோயில் இருப்பதை இன்றும் காணலாம். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைப்பிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் எனப்படுகிறது. இம்மலையானது 260 கோடி வருடங்கள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மக்கள் வலம் கிரிவலப்பாதையில் அஷ்டலிங்க கோயில்களும், இரமணமகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமிகள் போன்றோர்கள் சமாதிகள் அமைந்துள்ளன. எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகின்றனர் என்றாலும், முழுநிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.
பௌர்ணமி அன்று எண்ணற்ற சித்தர்கள் அண்ணாமலையை சுற்றி நடமாடுவதாகவும், சித்தர்களின் சக்தி வெளிப்படுவதாகவும், மலையின் மூலிகை காற்று பரவுவதால் மனதிற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால் பௌர்ணமி அன்று இலட்சக் கணக்கான பக்தர்கள் தங்களது குறைகளை தீர்க்க திருக்கோயிலுக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு பின்னர் கிரிவலம் சுற்றி வந்து பலனடைவது இன்றும் நடந்து வருகின்ற சிறப்பாகும்.
தல விருட்சம்
மூன்றாம் பிரகாரத்தில் தலவிருட்சமாக அமைந்துள்ளது மகிழ மரம் ஆகும்.நீண்டகாலமாக அமைந்துள்ள இந்த இடத்தில் தென்முகக்கடவுளாம் தக்ஷணாமூர்த்தியும் அடுத்து மகிழமரத்து விநாயகர் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்துள்ளார். தென்முகக்கடவுள் தக்ஷணாமூர்த்தியும் நமக்கு காட்சி கிடைக்கிறது. அருகிலேயே ஜலகண்டேஸ்வரர் அமர்ந்துள்ளார். இம்மேடையில் கிழக்குத் திசையில் நின்று பார்த்தால் ஒன்பது கோபுரங்களை நாம் பார்க்கலாம். இது மிக அரிய தொரு காட்சியாக உள்ளது.
இதர வகை
முருகனே முதற் கடவுள்
கோவில்களில் முதலில் நுழைந்தவுடன் விநாயகர் சன்னதி இருக்கும். ஆனால், இங்கு முருகன் சன்னதி இருக்கிறது. பக்தர்கள் முதலில் இவரையே வணங்குகிறார்கள். சம்பந்தாண்டான் என்னும் புலவர் அருணகிரிநாதரிடம் முருகனை நேரில் காட்டும்படி சொல்லி, அருணகிரிநாதரின் பக்தியை இகழ்ந்தார். அருணகிரிநாதர் முருகப்பெருமானை வேண்டவே, அவர் இங்குள்ள 16 கால் மண்டபத்தில் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவருக்கு கம்பத்திளையனார் (கம்பம் என்றால் தூண், இளையனார் என்றால் முருகன்) என்ற பெயர் பெற்றார்.
மோட்ச தீபம் போடுதல்
இத்திருக்கோயிலில் கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள அகல்விளக்குகளில் இறந்தவர்கள் மோட்சம் சென்றடைய வேண்டுதல் செய்து இறந்தவர்கள் பெயரில் உடல் அடக்கம் செய்யப்படும் நாள், அல்லது ஈமக்கிரியை செய்யும் நாள், அல்லது திதி அன்று அவரவர்களின் பிராத்தனைக்கு ஏற்றவாறு நல்லெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெயில் மோட்ச தீபம் போடப்பட்டு வருகிறது. இது எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத பிராத்தனை சிறப்பாகும்.
கரும்புத் தொட்டில் கட்டுதல்
பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் அண்ணாமலையாரை வேண்டி குழந்தை பிறந்ததும், திருக்கோயிலுக்கு வந்து அர்ச்சனை ஆராதனை செய்து கரும்பு கட்டுகள் கொண்டு வந்து, புதிய புடவையினால் தொட்டில் கட்டி, அதில் குழந்தையைப் படுக்க வைத்து மாடவீதி வலம் வந்து பிராத்தனை செலுத்துவது எந்தத் திருக்கோயிலிலும் இல்லாத பிராத்தனை சிறப்பாகும்.
ஆணவம் அடக்கும் பைரவர்:
இக்கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. இவரது சிலையை எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, தலையில் பிறைச்சந்திரன் மற்றும் திருவாட்சியுடன் கபால மாலையுடன் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.
நந்திக்குச் செய்யும் பெருமை
மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்று அனைத்து விதமான காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் மற்றும் அனைத்து வகை மலர்களால் ஆன மாலை அணிவித்து பூஜை செய்யப்படும். அந்த நேரத்தில் அண்ணாமலையார் தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக நந்தியின் முன் எழுந்தருளி அவருக்குக் காட்சி தருவார்.
நான்கு முக லிங்கம்
பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன் இங்குத் தனித் சன்னதியில் காட்சி தருகிறார். பிரம்மா இங்குச் சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரம்மா தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேத்ததை ஓதிக்கொண்டிருப்பார். இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.
செந்தூர விநாயகர்
ஆஞ்சநேயருக்குச் செந்தூரம் பூசி அலங்கரிப்பது போல், இத்தலத்திலுள்ள விநாயகருக்குச் செந்தூரம் பூசுகிறார்கள். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரை வருடப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஒரு நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்குச் செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கிறது.
🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)
சிவகங்கை தீர்த்தம் : திருக்கோயில் திருக்குளம் சிவகெங்கை தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்குளம் திருக்கோயில் பெரிய நந்தி அருகே அமைந்துள்ளது. திருக்குளம் இருபுறமும் மூடப்பட்டு பாதுகாப்பாக அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதம் ஆடிப்பூரம் அன்று நடைபெறும் 10ஆம் நாள் திருவிழா அன்று வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முன்பு தீர்த்தவாரி நடைபெறும்.
பிரம்ம தீர்த்தம் : திருக்கோயில் திருக்குளம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்குளம் திருக்கோயிலின் உட்புறம் நான்காம் பிரகாரத்தில், புரவி மண்டபத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. திருக்குளம் இருபுறமும் மூடப்பட்டு பாதுகாப்பாக அமைந்துள்ளது. திருவிழா காலங்களில் தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருவிழா 10-ம் நாள் சுப்பிரமணியசுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.
எப்போதாவது சந்திர கிரகணமோ சூரிய கிரகணமோ ஏற்படும் போது அஸ்தரதேவர் தீர்த்த வாரி நடைபெறும்.
🖼️ சிற்ப விவரங்கள் (Sculpture Details)
அருணகிரீஸ்வரர் : திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அருணகிரீஸ்வரர் சிற்பம். சுவாமி வீதி உலா பொழுது இவருக்க காட்சி அளித்தபின் செல்வார்
கோபுர கல்காரம் : கோபுர கல்கார மாடங்கள் சிற்ப வேலைபாடுகளுடன்
கழு மரம் சிற்பம் : கழு மரம் ஏற்றும் நிகழ்வினை குறிக்கும் சிற்பம்
தாங்கும் தரை சிற்பங்கள் : மண்டபங்களை தாங்கும் தரை தளவெளியில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள்
தூண் சிற்பம் : இராஐகோபுரத்தின் 13 நிலைகளை குறிக்கும் அற்புத சிற்பம். மேலே கலசம் இடி தாக்கும் போது கோபுரம் சேதமடையாமல் காக்கும் வகையில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தூண் சிற்பம்
நாட்டிய மங்கை தோற்றம் : மூன்று உடல் ஒரு தலை நாட்டிய மங்கை தோற்றம்
அழகிய தூண்கள் : அழகிய தூண்கள் சிற்பம்
பசு லிங்கத்திற்கு பால் சொரியும் காட்சி சிற்பம் : பசு லிங்கத்திற்கு பால் சொரியும் காட்சி சிற்பம் திருக்கோயில் முழுவதும் ஆங்காங்கே காணப்படுகிறது
யானைகளுக்கு சிற்பம் : திருக்கோயில் கட்டுமாணங்களில் பேருதவி புரிந்த யானைகளுக்கு திருக்கோயிலில் ஆங்காங்கே சிற்பங்கள்
லிங்கோத்பவர் : பகவான் மகாவிஷ்ணுவுக்கு பத்து அவதாரங்கள் என்றால் சிவபெருமானின் அவதாரங்களில் 25 முக்கியத்துவம் பெற்றவை.அவற்றுள் முக்கியமான ஒன்று லிங்கோத்பவர். சிவபெருமான் தான் லிங்கம் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தியாக வணங்குகிறோம்.
சிவ பெருமானின் திருவடியை அடியைக் காண திருமால் வராக (பன்றி) வடிவெடுத்து நிலத்தினை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன வடிவெடுத்து பறந்து சென்று கங்கை குடி கொண்ட முடியைக் காண சென்றார். கோடானகோடி ஆண்டு பயணம் செய்தும் லிங்கோத்பவரின் அடியை காண இயலாமல் திருமால் திரும்பினார், பிரம்மா, தாழம்பூவை பொய் சாட்சியாக வைத்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவிற்கு தனித்த ஆலயங்கள் இல்லாமல் போனது என்ற வரலாற்றை புராணங்கள் சொல்கிறது.
🛠️ வசதிகள் (Facilities)
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : ராஜகோபுரம் அருகில், கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி, திருக்கோவில் கலையரங்கம், கருணை இல்லம் அருகில், சுவாமி திருக்கல்யாண மண்டபம், கிளிகோபுரம் அருகில், சம்பந்த விநாயகர் சன்னதி அருகில் குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கழிவறை வசதி : ஆண்கள் கழிவறை 20
பெண்கள் கழிவறை 20
சக்கர நாற்காலி : கிழக்கு இராஜகோபுரம் அருகில் வடக்கு அம்மணிஅம்மன் கோபுரம், உள்துறை அலுவலகம் மற்றும் தெற்கு திருமஞ்சன கோபுரம்.
தங்கத் தேர் : பக்தர்கள் தங்களது பிரார்த்தனையின் பேரில் தங்கத்தேர் இழுக்கும் சேவைக்கு மாதாந்திர பௌர்ணமி மற்றும் சிறப்பு விசேஷ நாட்களை தவிர இதர நாட்களில் ரூ.1500/- செலுத்தி தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்ளலாம். இத்தங்கரதமானது திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் மட்டுமே உலா வரும். மேற்படி தங்கத்தேர் சேவைக்கு நேரடியாகவோ இணையதளத்தின் வழியாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முடி காணிக்கை வசதி : வசதி அமைவிடம் - கிழக்கு ராஜகோபுரம் வலதுபக்கம் அருகில்
வசதிகள் விவரம் - இத்திருக்கோயிலில் சட்டப்பேரவை அறிவிப்பின்படி பக்தர்கள் கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : கிழக்கு மற்றும் வடக்கு இராஜ கோபுரம் கோயில் வெளியே கட்டணமில்லா காலணி பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை : திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் மருத்துவ முதலுதவி மையத்தின் மூலம் முதலுதவி கிடைக்கப்பெற்று பயனடைகின்றனர். மருத்துவர்கள் இருவர், செவிலியர்கள் இருவர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உள்ளனர்.
மின்கல ஊர்தி : அம்மனி அம்மன் கோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம்
தகவல் மையம் : இத்திருக்கோயிலில் உள்ள புத்தக நிலையத்தில் அருணாசல புராணம், அருணகிரி வலம், திருத்தல விளக்கம், திருக்கோயில் திருவிழாச் சிறப்பு, திருக்கார்த்திகை தீப திருவிழா சிறப்பு, அன்னைத் தமிழில் அர்ச்சனை செவ்வோம், திருக்கோயில் பிரகார விளக்கமும் வழிபாடு முறைகளும் கல்வெட்டு சான்றுகளும், நால்வருக்கு திருமுறைகள், சைவ சமயக் கலைக் களஞ்சியம் - (தொகுதி 10) ஆகிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது
நூலக வசதி : அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வடக்கு இராஜ கோபுரம் ஆறாம் பிராகாரத்தில் நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் 1273 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கோவில் வரலாறு, தொன்மை, சிறப்புகள் குறித்த புத்தகங்கள் உள்ளன.
பொருட்கள் பாதுகாக்கும் அறை : வசதி அமைவிடம் - கோயில் வெளியே கிழக்கு மற்றும் வடக்கு இராஜ கோபுரம்
வசதிகள் விவரம் - கிழக்கு மற்றும் வடக்கு இராஜ கோபுரம் கோயில் வெளியே கட்டணமில்லா காலணி பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
துலாபாரம் வசதி : பக்தர்கள் காணிக்கைப் பொருட்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் இடம்.
குளியல் அறை வசதி : ஆண்கள் குளியலறை 28
பெண்கள் குளியலறை 08
🙏 சேவைகள் (Services)
நன்கொடை : பொது நன்கொடை செலுத்த விரும்பும் பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை.) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
அன்னதானம் : அன்னதானம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் புதுமைத்திட்டமான திருக்கோயில் அன்னதானத்திட்டம் கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து இத்திருக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு, அதன் மூலம் இத்திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு தினமும் 300 பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில். இதற்கான திட்டச்செலவாக பயனாளி ஒருவருக்கு ரூ.38/- செலவிடப்பட்டன. இந்த மதிய உணவில் சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய் கூடுதலாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் வடை மற்றும் பாயாசம் ஆகியவை வழங்கப்படுகிறது. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு 2022-2023யில் செய்யப்பட்டபடி இந்தத் திட்டத்தை நாள் முழுவதும் பக்தர்களுக்கு உணவு வழங்க விரிவுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தினை 31.12.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு. திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இத்திருக்கோயிலில் அன்னதானக்கூடத்திற்கான சமையல் அறையில் சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு உணவு தினமும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதான நன்கொடை பக்தர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். பக்தர்கள் வசதிக்காக இத்திருக்கோயில் இணையதளத்தில் இ-சேவைகள் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்த விரும்புவர்கள் (இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை) என்ற முகவரிக்கு நேரில் வந்து அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.
அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80ஜி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும்.





