← முகப்புப் பக்கம் செல்லவும் (Back to Home)

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - 621112

Arulmigu Mariamman Temple, Samayapuram - 621112

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி • தாலுகா: மண்ணச்சநல்லூர்

⏰ நேரங்கள் (Timings)

திறந்திருக்கும் நேரம் (Opening Timings):

அதிகாலை 05.30 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடை திறந்திருக்கும் - திருவிழாக்காலங்களில் மாறுதலுக்குஉட்பட்டது.

பூஜை நேரங்கள் (Pooja Timings):

1. உஷக்கால பூஜை : 06:00 AM to 06:15 AM IST
2. காலசந்தி பூஜை : 08:00 AM to 08:15 AM IST
3. உச்சிக்கால பூஜை : 12:00 PM to 12:15 PM IST
4. சாயரட்சை பூஜை : 06:00 PM to 06:15 PM IST
5. இரண்டாம்கால பூஜை : 08:00 PM to 08:15 PM IST
6. அர்த்தஜாம பூஜை : 09:00 PM to 09:15 PM IST

🕉️ மூலவர் விவரங்கள் (Deity Details)

மூலவர் சுவாமி (Moolavar Swamy): Not available

மூலவர் அம்பாள் (Moolavar Ambal): அருள்மிகு மாரியம்மன்


ஸ்தல விருட்சம் (Sacred Tree): வேம்பு

ஆகமம் (Tradition): காரண ஆகமம்

கருவறை வடிவம் (Sanctum Shape): செவ்வக வடிவம்

🏠 முகவரி விவரங்கள் (Address Details)

மாவட்டம் (District): திருச்சிராப்பள்ளி

தாலுகா (Taluk): மண்ணச்சநல்லூர்

தொலைபேசி (Phone): 04312670460

முகவரி (Address):

சன்னதி வீதி, சமயபுரம், 621112

✨ ஆலயத் தொகுப்பு (Temple Overview)

தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், மண்ணச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் - 621112 ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும். இக்கோயிலின் கருவறையில் அருள்மிகு முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 13th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், திருச்சிராப்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது.

📍 இருப்பிடம் மற்றும் வழிகாட்டுதல் (Location & Directions)

Google வரைபடத்தில் வழிகாட்டுதலைப் பெறவும் (Get Directions from your Location) ↗️

🗺️ அருகில் உள்ள நகரங்கள் (Nearby Cities)

Tiruchirappalli (10 km), Perambalur (40 km), Thanjavur (48 km), Pudukkottai (61 km)

📜 தல வரலாறு மற்றும் சிறப்பு (History & Special Info)

வரலாற்று தகவல் (Historical Information):

ஆகமம் : காரண ஆகமம்
பாடல் பெற்றது : இல்லை
ஸ்தல விருட்சம் : வேம்பு
கருவறை வடிவம் : செவ்வக வடிவம்
எந்த நூற்றாண்டை சேர்ந்தது : 13th நூற்றாண்டு
எந்தெந்த ஆட்சியர் காலம் : பிற்கால சோழர்கள், பிற்கால விஜயநகரம்
பாரம்பரிய கோயிலா : No

தல சிறப்பு (Thiruthala Special):

பரிகாரம்
அக்னி பிழம்பு இறுதியில் எவ்வாறு சாம்பலாக பஷ்பம் அடைவதைப் போல பக்தர்கள் தங்களுடைய கஷ்டங்களை அம்மனிடம் தீ வினைகள் நீங்கி நல்வினைகள் நிகழ அக்னி சட்டி எடுத்து திருக்கோயிலை வலம் வந்து திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாரியம்மன் மண்டபம் எதிர்புறம் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அக்னி சட்டி தொட்டியில் இறக்கி வைப்பது வழக்கமாக உள்ளது.
பரிகாரம்
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களில் குழந்தை பேறு இல்லாதவர்களும், சுகப்பிரசவம் அடைந்தவர்களும் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்பில் தொட்டில் கட்டி பெற்றோர்கள் முன்னும் பின்னுமாக தங்கள் தோல்களில் சுமந்து திருக்கோயிலை வலம் வந்து அதற்குரிய இடத்தில் பிரார்த்தனையை நிறைவேற்றுவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது.
பரிகாரம்
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு வெள்ளியால் ஆன கண்மலர், கை, கால், மார்பு, சிரசு, தலை, ஆண் மற்றும் பெண் உருவாரங்கள் உள்ளிட்டவற்றை உடல் நோய் நீங்க காணிக்கையாக செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
பரிகாரம்
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அம்மை வார்த்தவர்கள் தங்களுக்கு எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், தங்களுக்கு ஏற்பட்ட உபாதைகளில் இருந்து விரைவாக குணமடைய வேண்டியும் அம்மனுக்கு உப்பு, மிளகு பொட்டலங்களை காணிக்கையாக அதற்குரிய இடத்தில் செலுத்துவது வழக்கமாக உள்ளது.
பரிகாரம்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என எவ்வித வித்யாசமும் இன்றி அம்மனின் அருளால் ஆரோக்கியமாக வாழ தங்கள் தலை முடியினை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வருவது வழக்கமாக உள்ளது.
பரிகாரம்
பக்தர்கள் தங்கள் விவசாய நிலங்களில் விளையும் நெற்பயிர்கள் மற்றும் நவதானியங்கள் நன்கு விளைச்சல் தர வேண்டி பிரார்த்தனையாக காணிக்கை செலுத்தி வழிபடுவர் மற்றும் ஆடு, மாடு, கோழி முதலிய கால்நடைகளை காணிக்கையாக திருக்கோயிலுக்கு செலுத்துவது தொன்று தொட்டு வழங்கி வருவது வழக்கமாக உள்ளது.
தல விருட்சம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தல விருட்சம் வேப்பமரமாகும். வேப்பமரம் என்றாலே அது மகாமாரியின் மறுபிம்பமாக கருதப்படுகிறது. வேப்ப மரத்தை அம்பாளுடன் தொடர்புபடுத்திக் கூறும் மரபு தமிழ்ப்பண்பாட்டில் நிலைபேறுடையதாக கருதப்படுகிறது. பல்வேறு மருத்துவ நலம் பயக்கும் இவ் வேப்பமரத்தினடியில் உள்ள புற்றில்தான் ஆயிரம் கண்ணுடையாளின் அழகிய செப்புத் திருமேனி எடுக்கப்பட்டது. தற்போது துணை சன்னிதியில் வீற்றிருக்கும் அன்னை இன்றும் தல விருட்சத்தை நோக்கியவாறே காட்சியளித்துக் கொண்டுள்ளாள். நலன்பயக்கும் வேப்பமரம் அன்னையின் திருவுருவமாக வணங்கப்பட்டு வருகிறது. வேப்ப மரத்தை அன்னையின் உடலாகவும், வேப்ப இலையை மகாமாரியின் அக்னி கிரீடமாகவும், வேப்பம் பூவை நெற்றியில் உள்ள வைரத்திலகத்திற்கும் ஒப்பிட்டுக் கூறுவது தொன்று தொட்டு இருந்து வரும் நிகழ்வாக உள்ளது.
பிரார்த்தனை
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பான வைபவங்களில் தைப்பூசத் திருவிழா முக்கிய இடம் வகிக்கின்றது. தை மாதம் என்றாலே தமிழர்களுக்கு விழா விருந்தாகவே இருக்கும். 10 நாள் கொண்டாடப்படும் இப்பெருவிழாவில், 10-வது திருநாள் அம்பாள் காலை சுமார் 7.31 மணிக்குமேல் 8.31 மணிக்குள் கண்ணாடி பல்லக்கில் பவனி வருகிறாள். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ திருக்கோயிலிருந்து புறப்பட்டு டோல்கேட், நொச்சியம் வழியாகச் சென்று, வழி நெடுகிலும் பல உபயங்கள் கண்டருளி மாலை 5.00 மணிக்கு கொள்ளிடம் வடதிருகாவேரியை சென்றடைகிறாள். மாலை 5.30 மணிக்கு அன்னை தீர்த்தவாரி கண்டு, சிறப்பு ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருப்பாள். இத்தருணத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி அம்பாளின் அருளைப் பெறுவர். அன்றிரவு சிறப்பான வாணவேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். மேலும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இந்நாள் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. அன்று திருக்கோயில் நடை மாலை 4.00 மணிக்கு சாத்தப்படுகிறது. இரவு 10.00 மணியளவில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலிருந்து சீர் மரியாதை பெறும் நிகழ்வு அங்குள்ள ஆஸ்தான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 1.00 மணி முதல் 3.00 மணி வரை அம்மனுக்கு மஹா அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகிறது. அதிகாலை 5.00 மணிக்கு அம்பாள் அங்கிருந்து கண்ணாடிப் பல்லக்கில் புறப்பட்டு நொச்சியம், மண்ணச்சநல்லூர், வெங்கக்குடி வழியாக வரும் வழியில் பல்வேறு உபயங்கள் கண்டருளி, இரவு 10.00 மணியளவில் திருக்கோயில் வந்தடைகிறாள். இரவு 11.00 மணிக்கு அம்பாளுக்கு துவஜாரோகணம், நவசந்தி காப்பு அவிழ்த்தல் ஆகியன நடைபெறுகின்றது. தைப்பூச உற்சவம் அன்றிரவுடன் முடிவடைகின்றது.
பிரார்த்தனை
மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் இவ்விழா தமிழகத்தின் வேறு எங்கும் நிகழாத விமரிசையான பெருவிழாவாகும். இந்நாளில் காலை திருக்கோயில் பார்வதி மண்டபத்திலிருந்து திருக்கோயில் இணைஆணையர் / செயல் அலுவலர், அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் புஷ்ப கூடையுடன் திருவீதி உலா வருகின்றனர். இதனை அடுத்து காலை 8.00 மணிக்கு மேல் அம்மனின் பச்சைப்பட்டினி விரத காப்பு கட்டுதல் இனிதே துவங்குகிறது. ரக்ஷாபந்தனம் என்றழைக்கப்படும் நிகழ்வில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மாலை அணிந்து விரதம் இருப்பர். இச்சம்பவத்தன்று பிரதிஷ கணபதி மூலம் எடுத்துவரும் புஷ்பங்களால் அருள்மிகு அம்பாளுக்கு ஆண்டவர் சன்னதியில் புஷ்ப அபிஷேகம் நடைபெறுகிறது. இது சமயம் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் அம்மனுக்கு ஏராளமான வகைகளுடன் கூடிய மலர்களை அபிஷேகம் செய்வர். அம்மனை விதவிதமான மலர்களால் அலங்கரித்து பக்தர்கள் கண்டு இன்புறுவர். தமிழகத்தில் இவ்வாறான பூச்சொரிதல் விழா வேறு எங்கும் நிகழாத, காணக்கிடைக்காத காட்சியாகும். அன்று மாலை 3.00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அதனை அடுத்து மகாமண்டபத்தில் சாயரட்சை பூஜை அம்பாளுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதில் பச்சைமாவு, இளநீர், மற்றும் பழவகைகள் ஆகியன பூச்சொரிதல் முதல் நாள் முதல் 28 நாட்களுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. மேலும் நீர்மோர், பானகம், துள்ளுமாவு ஆகியனவும் மகாமண்டபத்தில் வைத்து அம்மனுக்கு சாயரட்சை பூஜையை நடத்துகின்றனர். பக்தர்களின் நலன் கருதி அன்று இரவு முழுவதும் திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். பூச்சொரிதல் திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை பல்வேறு பூக்களால் அலங்கரித்து வழிபட்ட வண்ணமாய் இருப்பர். பல்வேறு இனமக்கள் தாங்கள் விரும்பியவாறு ஏராளமான மலர்களை அம்மனுக்கு அணிவித்து மகிழ்வர். இந்நாளில் திருக்கோயில் முழுவதும் மலர்கள் குவிந்து காணப்படும்
பிரார்த்தனை
வருடந்தோறும் மாசி கடை ஞாயிறு முதல் பங்குனி கடை ஞாயிறு வரை இவ்விரதத்தில் அன்னை கடும் தவம் இருக்கிறாள். 28 நாட்களும் அன்னைக்கு வழக்கமாக படைக்கப்படும் அனைத்து விதமான நைவேத்தியங்களும் படைக்கப்படுவதில்லை. உண்ணாநோன்பு இருக்கும் அன்னைக்கு உப்பில்லா நீர்மோரும், கரும்பு பானகமும், இளநீர் மற்றும் குளிரூட்டும் கனிவகைகள் மட்டுமே நைவேத்தியம் செய்யப்படுகிறது. 28- வது நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி, அதிலிருந்து 10- வது நாள் திருத்தேர் விழா நடைபெறுகிறது. இத்தருணத்தில் அன்னையை வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். 12 ராசிகளின் அதிபதியாக அன்னையே விளங்குவதால் அது தொடர்பான அனைத்து தோஷங்களையும் அம்பாள் துடைத்து அகற்றுகிறாள். நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி, நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாகக் கொண்டு அருள்பாலிப்பதால் அம்பாளை இந்தக் காலக்கட்டத்தில் வணங்குவதன் மூலம் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் பரிபூரண நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக பக்தர்கள் திருக்கோயில்களில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அந்தந்த மூர்த்திகளை ஆராதனை செய்து உண்ணாநோன்பு கடைபிடிப்பது வழக்கம். ஆனால், இத்திருத்தலத்தில் மட்டும்தான் மரபு மாறி மகாமாரியம்மன், சிவன், பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகிய மூர்த்திகளை நோக்கி தன்னை நாடி வரும் பக்தர்களின் நலனுக்காக அவர்களுக்கு எவ்வித தீங்கும் நேரா வண்ணம் காத்திட பச்சைப்பட்டினி விரதம் இருந்து கடுமையான தவம் செய்து இச்சா, கிரியா, ஞான சக்திகளை பெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். அம்பாள் மஞ்சள் ஆடை அணிந்து இத்தகைய பச்சைப்பட்டினி விரதம் இருப்பதை தரிசனம் செய்ய இலட்சக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகைதந்த வண்ணம் இருப்பார்கள். தன்னை நாடி வரும் பக்தர்களின் நலனுக்காக தெய்வமே பச்சைப்பட்டினி விரதமிருந்து காப்பது உலகில் வேறு எந்த திருக்கோயிலிலும் காண இயலாத அருள்செறிவான திருநிகழ்வாகும். அன்னை இத்திருத்தலத்தில் பதம்மாறி சிவபதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்புத்திருவுருவமாக சுகாசனத்தில் ஆயிரம்கோடி சூர்யபிரகாசத்துடன் தங்கத் திருமுடி கொண்டு குங்குமநிற மேனியாய், வைர ஆபரணங்களுடன் சூர்ய சந்திரனை விடவும் பூரணமாக ஜொலித்து கண்களில் அருள் ஒளி பாவித்து கருணை முகமாய், அன்னைக்கு அன்னையாய், ஆதிமுதல் ஆதார சக்தியாய் நாடிவருவோர்க்கு மட்டுமின்றி, நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களைக் காக்கவும், மாதுளம் மேனியாள் மஞ்சள் ஆடை உடுத்தி, திருமேனியில் வாசனை மலர்களைத் தரித்து மும்மூர்த்திகளை நோக்கியும், மாயாசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், அன்னை தவம் மேற்கொள்கிறாள். பக்தர்களுக்கு எவ்வித நோய்களும் தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க அம்மன், பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள்.
பிரார்த்தனை
ஆயிரம் கண்களுடைய சமயபுரத்தாளுக்கு நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவமாகும். பஞ்சபூதங்கள் ஐம்பெருந்தொழில், ஐம்பெரும்கலை, ஐம்பெரும்பீடம் (பிரம்மா, விஷ்ணு, ருத்ரா, மகேஸ்வர சதாசிவம்) மற்றும் ஐம்பெரும் உயிர் அவத்தைகள் (பிறப்பு, பிணி, மூப்பு, இறப்பு, முக்த) இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்சப்பிரகார உற்சவம். மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்த இத்தலத்தில் அக்னிநட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக பிரதி வருடம் சித்திரை மாதம் கடைசி ஒன்பது நாட்கள் முதல் வைகாசி ஒன்பதாம் நாள் முடிய பஞ்சப்பிரகார விழா நடைபெறுவது திருக்கோயில் வழக்கம் ஆகும். நவக்கிரகங்களையும், 27 நட்சத்திரங்களையும், 12 ராசிகளையும் இத்தலத்தில் தனது கட்டுப்பாட்டுக்குள் இயக்கும் அஷ்ட புஜங்களுடன் கூடிய நூதன ஆதிபீட சுயம்பு அம்மனுக்கு வசந்த உற்சவத்தின் நடுநாயகமாக வைகாசி 1ம் நாள் அன்று பஞ்சபிரகார உற்சவம் நடைபெறும். இத்திருக்கோயிலில் இருந்து பாரம்பரியமாக தங்கம் மற்றும் வெள்ளி குடங்களில் பரிவாரங்கள் புடைசூழ மேளதாளத்துடன் கொள்ளிடத்திலிருந்து வரப்பெறும் திருமஞ்சனத்துடன் சிறப்பு வேத பாராயணம், வேதமந்திரம் மற்றும் பூஜைகள் செய்து மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மஹா அபிஷேகம் நடைபெறும். ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் மாதுளம் பூமேனியாய் வேண்டியவருக்கு வேண்டிய வண்ணம் அருள்பாலித்து ஆதி உன்னத சுயம்பு சக்தியாக விளங்கும் அம்மன் இரவு 12.00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரம்.. முதல் சுற்று.. தங்க கொடிமரம் இரண்டாவது சுற்று.. தங்க ரதம் வலம் வரும் பிரகாரம் மூன்றாவது சுற்று.. தெற்கு ரத வீதியில் பாதியும்.. வடக்கு மாடவாள வீதியில் நான்காவது சுற்று.. கீழ ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி ஐந்தாவது சுற்றாகவும் என பஞ்சப்பிரகார திருச்சுற்றுகளை சதாசிவத்தின் சொரூபமாகவும் சக்தி பஞ்சாரியாகவும் நடத்துகிறாள்.
பிரார்த்தனை
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் இத்திருக்கோயிலில் எட்டுத் திருக்கரங்களுடன் திகழ்கிறாள். நவகிரகங்களையும் 27 நட்சத்திரங்களையும் அவற்றின் ஆதிக்கத்தையும் இயந்திரங்களாக உள்ளடக்கி அம்பாள் விளங்குகிறாள். தேவி பாகவதம், அக்னி புராணம் தேவி மஹாத்மியம் முதலான நூல்களில் அம்பாள் புரட்டாசி பிரதமை முதல் நவமி வரையிலான 9 தினங்கள் ஊசி முனையில் துர்கை, மஹாலெட்சுமி, சரஸ்வதியாக கடுந்தவம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 10 ஆம் நாளான தசமியன்று வெற்றி பெற்ற நாளாக விஜயதசமி என சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலிலும் நவராத்திரி விழா பத்து நாளும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை
பொதுவாக தேர்த்திருவிழா என்பது பிரம்மோற்சவத்தைக் குறிக்கும். இப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் கொடியேற்று விழா, வாகனாதி விழா, தேர்விழா மற்றும் தீர்த்த விழா முதலிய முக்கிய திருவிழாக்கள் இத்தருணத்தில் நடைபெறும். இவ்விழாக்கள் ஒவ்வொன்றும் இறைவன், இறைவியின் ஐந்தொழில்களைக் கொண்ட தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடியேற்று விழா படைத்தலையும், வாகனாதி காத்தலையும், தேர்த்திருவிழா அழித்தலையும், மௌனவிழா மறைத்தலையும், தீர்த்த விழா அருளல் தொழிலையும் குறிக்கும். இவ்வாறு இறைவன், இறைவியின் ஐந்தொழில்களையும் அதன் உண்மைகளையும் உலகிற்கு உணர்த்தவும், உயிர்கள் நலம்பெறவும், இப்பெருவிழா நடைபெற்று வருகிறது. அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் இத்தகைய வைபவங்கள் மிக சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. பிரம்மோற்சவத்தின் பத்தாம் நாள் நடைபெறும் இவ்விழா பிரசித்தி பெற்றது. அன்று காலை அம்மன் திருக்கோயிலிலிருந்து கேடயத்தில் புறப்பட்டு திருத்தேருக்கு வந்து சேர்கிறாள். பூ மற்றும் பல்வேறு அலங்காரங்களுடன் கூடிய திருத்தேரில் அம்மன் வீற்றிருக்க காலையில் திருத்தேர் வடம் பிடித்தல் இனிதே துவங்குகிறது. பார்வதி மண்டபத்தின் கிழக்கில் இடப்புறம் தெற்குநோக்கி புறப்படும் திருத்தேர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். இத்தருணத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் அம்மனின் அருளைப்பெற பல ஊர்களிலிருந்து அன்னையின் திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வர். மேலும் தெற்கு நோக்கிய திருத்தேர்பவனி, மேற்கு, வடக்கு, கிழக்கு என வீதிகளை கடந்து மீண்டும் திருக்கோயிலின் திருவீதி முன் திருத்தேர் நிலைக்கு வந்து சேர்கின்றது. இரவு 10.00 மணிவரை திருத்தேரில் பொதுமக்களுக்கு அம்மன் காட்சி தருகின்றாள். இரவு 10.30 மணிக்கு திருத்தேரைவிட்டு இறங்கி இரவு 11.00 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைகிறாள். அம்மனை நேரடியாகச் சென்று தரிசிக்க இயலாத பக்தர்கள், திருத்தேர் உலா மூலம் தாங்கள் இருந்த இடத்திலேயே நேரடியாகக் கண்டு அருள்பெறும் வாய்ப்பினையும் பெறுகின்றனர். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள், முதியவர்கள், இயலாதோர் மற்றும் பிறர் அம்மனின் அருளைப்பெற இத்தேர்த்திருவிழா மிகச்சிறந்ததொரு வாய்ப்பினைத் தருகிறது. வலம் வரும் அன்னையின் அருளை மக்கள் அனைவரும் பெற்று புத்துயிருடன் தங்கள் இல்லம் நோக்கிச் செல்கின்றனர். அன்னை நம் துன்பங்களையும், அறியாமையால் நமக்குள் இருக்கும் ஆணவத்தையும் அடியோடு அகற்றுகிறாள். திருத்தேர் பவனிவரும் அம்மன் தன்னுடைய அருளை ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களுக்கு எவ்வித பேதமுமின்றி ஏகமனதாய் வழங்குகிறாள். ஆன்மா என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அத்தகைய ஆன்மாக்களாகிய நாம் ஒன்றுக்கூடி ஒருமித்த மனநிலையில் அன்னை மகமாயியை தியானிக்க நமது ஆன்மா முக்திபெறும் என்பது இதன் வழி அறியப்படுகின்றது.
புனித தீர்த்தம்
தென்னகத்தில் பெருமைமிக்க காவேரியின் உபநதியான பெருவள வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் புனித தீர்த்தம் காவேரியின் உபநதியாக இருப்பதால். குளித்தவுடன் சகலவித பாவங்களும், வியாதிகளும், அம்பாளின் அனுககிரகத்தால் தீர்க்கப்படுகின்றன. இப்புனித நீரில் அம்பாளின் நாமத்தை மூன்று முறை உச்சரித்து மூழ்கி எழுந்தால். இதுவரை கண்டிராத உள்ளத்தூய்மை, உடல் தூய்மை ஆகியன ஏற்பட்டு புத்துணர்ச்சியை அடைந்து மக்கள் மனநிறைவு பெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும். தெற்கு தேரோடும் வீதியில் தென்புறத்தில் ஓடிக்கொண்டிருந்த பெருவள வாய்க்காலின் போக்கினை பெருந்திட்ட வளாகத்தின் தெற்கு புறத்தில் மாற்றப்பட்டு திருக்கோயில் வளாகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கப்பிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் இங்கு நீராடி, வழிபாடு மேற்கொண்ட பின்னரே பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணத்தை செய்து முடிப்பர். இங்கு ஆடிப்பூரத் தீர்த்தவாரியும், ஆடி பெருக்கு தீர்த்தவாரியும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
புனித தீர்த்தம்
இத்தீர்த்தம் திருக்கோயிலின் வடமேற்கேயுள்ள வாயுமூலையில் அமையப்பெற்றுள்ளது. திருக்கோயில் பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் இத்திருக்குளம் அமையப் பெற்றுள்ளது. புராண காலத்தில் சப்த கன்னியர்கள் ஒவ்வொரு மகாமகத்திற்கு முன்பும், கங்காதேவியை இப்புனித தீர்த்தத்தில் ஆவாகனம் செய்து அங்கிருந்து பெருக்கெடுத்து ஓடும் புனித நீரை கும்பகோணம் மகாமகத்தில் சேர்ப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே தான் வரலாற்று சிறப்புப் பெற்ற இத்தீர்த்தத்தின் வடமேற்குப்பகுதியில் அதிசய மகாமக தீர்த்த ஊற்று உள்ளது. இங்ஙனம் சக்தி தீர்த்தம் தன்னகத்தே அதிசய மகாமகதீர்த்தம் என்றதொரு புனித ஊற்று தீர்த்தத்தை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இன்றும் இந்த அதிசய மகாமக தீர்த்தம் முன்பாகவும் வெள்ளம் பெருக்கெடுத்து, சக்தி தீர்த்தம் நிரம்பும். ஒவ்வொரு மகாமக காலத்தின் போதும் ஏற்படும் இவ்வாறான அதிசய நிகழ்வின் போது ஏராளமான பக்தர்கள் வந்து இத்தீர்த்த நீரை எடுத்துச் செல்வது வழக்கம்.
புனித தீர்த்தம்
அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் வடமேற்கே, திருச்சி சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு, இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜயநகர நாயக்கர் காலத்தில் இக்குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப்பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பான கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்றிருப்பதையும் காண முடிகிறது. இத்திருக்குளத்திற்கு பெருவள வாய்க்கால் வழியாக நீர்கொண்டு வரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர் வழிப்போக்கும், நிலத்தடி நீர் வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்போற்சவபெருவிழா கொண்டாடப்படுகின்றது. இங்கு தைப்பூசத்திற்கு முதல் நாள் தைத் தெப்பமும், சித்திரைத் தேர் முடிந்து மூன்றாம் நாள் சித்திரை தெப்ப திருவிழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நாட்களில் அருள்மிகு மாரியம்மன் மேற்கு கரையிலுள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குகிறாள். முற்காலத்தில் அரசர்கள் மேற்பார்வையில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்த இக்குளம் தற்போது திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்திலிருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்தி காவடி எடுப்பது, பால் குடம், தீர்த்தக்குடம் போன்றவற்றை துவங்குவது இன்றளவும் மரபாக இருந்துவருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக்குளத்தில் பலவகையான தீபங்களை மிதக்கவிட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகின்ற வழக்கமும் உள்ளது.
புனித தீர்த்தம்
அருள்மிகு கனகாம்பிகை உடனுறை முக்தீஸ்வரர் திருக்கோயிலின் தெற்கேயும், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தென் கிழக்கேயும் அமைந்திருப்பது வரலாற்றுச் சிறப்புப்பெற்ற ஜடாயு தீர்த்தமாகும். ஜடாயுவிற்கு இறைவன் முக்தி கொடுத்ததாக கூறப்படும் புகழ்பெற்ற தலம் இதுவே ஆகும். ஜடாயுவின் தாகத்தைத் தணிக்கவும், இராவணன் சீதையை கடத்திச் சென்ற விபரத்தை இராமனிடம் கூறும் வரை தன் உயிர் பிரியாமலிருக்க ஜடாயு இத்தல மகேஸ்வரனிடம் வேண்ட, மகேஸ்வரனால் ஏற்படுத்தப்பட்ட இத்தீர்த்தமே ஜடாயு தீர்த்தமாகும். சர்வலோகத்தை காக்க பிரசித்தி பெற்றதாகவும் இன்றும் வற்றாத நீர்நிலையைக் கொண்டும் இத்தீர்த்தம் விளங்குகிறது. மேலும் உயிர் பிரிந்த ஜடாயு தன்னுடைய தந்தை தசரதனுக்கு நண்பன் என்பதால் ஜடாயுவிற்கு ஈமக்கடன்களைச் செய்ய இராமன் பூமியில் நீர் ஊற்று ஒன்றினை உண்டாக்கினார், அதுவே ஜடாயு தீர்த்தம் என்பதாயிற்று என்ற மற்றொரு புராணக் குறிப்பும் விளங்குகின்றது.
புனித தீர்த்தம்
இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலின் கிழக்கில் அமைந்திருப்பது கங்கை தீர்த்தமாகும். இது அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தென் கிழக்கே அமையப் பெற்றுள்ளது. காடு ஆறு மாதம், நாடு ஆறு மாதம் எனச் சென்றுகொண்டிருந்த விக்கிரமாதித்தன் தமது இஷ்டதேவதையான காளிதேவிக்கு நித்திய பூஜைகளைச் செய்ய கங்காதேவியிடம் வேண்டினான். கங்கையும் அங்கு சிறப்பாக தோன்றினாள். இதுவே கங்கை தீர்த்தம் எனும் வற்றாத தீர்த்தமாகும். மகிழவனத்து மாகாளி வீற்றிருக்கும் இவ்விடத்திலுள்ள தீர்த்தம் வற்றாத்தன்மைக் கொண்டதாகும். திருமணத் தடைகள், தீராத நோய்கள், பில்லி சூன்யம் மற்றும் ஏவல் போன்ற தடைகளை அகற்றிட இத்தீர்த்தம் ஓர் அருமருந்தாகும். மூளைக்கோளாறு, குழந்தையின்மை ஆகியவற்றை குணப்படுத்த ஏதுவான அற்புத மருந்தாக இந்த புனித தீர்த்தம் இன்றும் பக்தர்களுக்கு பயன்பட்டு வருகிறது. அம்பாளின் அளவிலாக் கருணையினாலும், பேரருளினாலும் இத்தீர்த்தத்தை பயன்படுத்தும் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நிலைகளில் நலன் பயப்பதாக அறியப்படுகின்றது. அம்மை நோய் மற்றும் கண் நோய்களுக்கு இத்தீர்த்தம் ஓர் அருமருந்தாகும். செய்வினை மற்றும் மந்திர சக்தியை இத்திருக்கோயில் தீர்த்தம் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டதாக நம்பப்படுகிறது. புதிதாக கட்டப்படும் அனைத்துத் திருக்கோயில்களிலும் இறைசக்தியை நிலைநிறுத்த இத்தீர்த்தம் மிகப்புனிதமானதாக கருதி எடுத்துச் செல்லப்படுகிறது.

🌊 திருக்கோவில் குளம் (Temple Tank)

மாரியம்மன் திருக்குளம் : அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் வடமேற்கே, திருச்சி சென்னை நெடுஞ்சாலையில், சமயபுரத்திற்கு, இடப்புறம் இத்தீர்த்தம் அமைந்துள்ளது. விஜயநகர நாயக்கர் காலத்தில் இக்குளம் வடிவமைக்கப்பட்டதாகும். நாற்புறமும் நுழைவுப்பாதை படிகளுடன் அமைக்கப்பட்டு நடுவில் அழகிய கோபுரத்துடன் சிறு மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பான கட்டிடக்கலை மரபுகளை இத்திருக்குளம் பெற்றிருப்பதையும் காண முடிகிறது. இத்திருக்குளத்திற்கு பெருவள வாய்க்கால் வழியாக நீர்கொண்டு வரவும், எஞ்சிய நீரை வெளியேற்ற தரையின் உட்புறம் வாய்க்கால் மூலமாக நீர் வழிப்போக்கும், நிலத்தடி நீர் வழி வாய்க்காலும் அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். மேற்குறிப்பிட்ட முறையில் நீரை நிரப்பி தெப்போற்சவபெருவிழா கொண்டாடப்படுகின்றது. இங்கு தைப்பூசத்திற்கு முதல் நாள் தைத் தெப்பமும், சித்திரைத் தேர் முடிந்து மூன்றாம் நாள் சித்திரை தெப்ப திருவிழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நாட்களில் அருள்மிகு மாரியம்மன் மேற்கு கரையிலுள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி வழங்குகிறாள். முற்காலத்தில் அரசர்கள் மேற்பார்வையில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்த இக்குளம் தற்போது திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக சீரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தீர்த்தத்திலிருந்துதான் பக்தர்கள் அக்னிசட்டி எடுப்பது, அலகு குத்தி காவடி எடுப்பது, பால் குடம், தீர்த்தக்குடம் போன்றவற்றை துவங்குவது இன்றளவும் மரபாக இருந்துவருகிறது. பிரசித்தி பெற்ற இத்திருக்குளத்தில் பலவகையான தீபங்களை மிதக்கவிட்டு அம்மனுக்கு பிரார்த்தனை தீபம் ஏற்றுகின்ற வழக்கமும் உள்ளது.
சர்வேஸ்வரர் குளம் : திருக்கோயிலின் வடமேற்கேயுள்ள வாயுமூலையில் அமையப்பெற்றுள்ளது. திருக்கோயில் பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தில் இக்குளம் அமையப் பெற்றுள்ளது.

🛠️ வசதிகள் (Facilities)

சக்கர நாற்காலி : இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்களுக்கு இத்திருக்கோயில் மேற்கு நுழைவு பகுதியில் சக்கர நாற்காலிகள் மையத்தில் வழங்கப்படுகிறது. விரைவு தரிசனத்திற்கு சக்கர நாற்காலிகள் பயன்படுத்துபவர்களுடன் கூடுதலாக ஒருவர் உதவிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
குடிநீர் வசதி (ஆர்.ஓ) : திருக்கோயில், வரிசை வளாகம், மாரியம்மன் மண்டபம், அன்னதான கூடம், முடி காணிக்கை மண்டபம், பிரசாத தயாரிப்பு கூடம், திருமண மண்டபம், ஓதுவார் பயிற்சி பள்ளி, திருக்கோயில் மடப்பள்ளி, தங்கும் விடுதி, கருணை இல்லம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
காது குத்தும் இடம் : திருக்கோயிலில் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிரார்த்தனையாக மொட்டை அடித்து காது குத்துவதற்காக திருக்கோயில் மூலம் இராஜகோபுரத்தின் அருகே தனியாக இட வசதி செய்யப்பட்டுள்ளது.
குளியல் அறை வசதி : பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் பெருந்திட்ட வளாகப்பகுதியிலும், திருக்கோயில் பேருந்து நிலையத்திலும் ஆண் பக்தர்களுக்கு 28 குளியலறை மற்றும் பெண் பக்தர்களுக்கு 28 குளியலறையும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், முடி காணிக்கை செலுத்தி வரும் பக்தர்கள் குளிக்கும் வசதிக்காக மாரியம்மன் மண்டபம் பின்புறம் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு பெரிய குளியல் தொட்டிகள் தனித்தனியே கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
மரத் தேர் : திருக்கோயில் தேரோடும் வீதியில் 42 அடி உயரமுள்ள மரத்தினால் ஆன மரத்தேர் அமைந்துள்ளது. சித்திரை திருவிழாவின் 10 ம் நாள், சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை அருள்மிகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் அம்மன் வீற்றிருக்க பக்தர்களால் வடம்பிடித்து தேரோடும் வீதியில் வலம் வந்து நிலை நிறுத்தப்படும்.
வேத பாட நிறுவனங்கள் : திருக்கோயில் பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் 8 மாணவர்கள் பயின்று வரும் ஓதுவார் பயிற்சி பள்ளி நடைபெற்று வருகிறது. இது மூன்றாண்டு படிப்பாக செயல்படுகிறது. தேவாரம் மற்றும் குரலிசை வகுப்புக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு, உடை, புத்தகங்கள் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு மாணவரின் வங்கி கணக்கிலும் மாதந்தோறும் ரூ. 3,000/- ஊக்கத்தொகையாக செலுத்தப்பட்டு வருகிறது.
வாகன நிறுத்தம் : திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள முடி மண்டபம் அருகிலும், திருக்கோயில் பேருந்து நிலையத்திலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனித் தனியே வசதி செய்யப்பட்டுள்ளது.
தங்குமிட வசதி : பக்தர்கள் அமாவாசை மற்றும பௌர்ணமி நாட்களில் இரவு தங்கி செல்ல வசதியாக 52,000 சதுர அடியில் அனைத்து வசதிகளுடன் இரண்டு தளங்களுடன் மாரியம்மன் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதில் தரை தளத்தில் தற்போது அன்னதானம் நடைபெற்று வருகிறது. தற்போது 3.76 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்க அமாவாசை மண்டபம் இரண்டாம் தளத்தில் கட்டப்பட உள்ளது. மேலும், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இளைப்பாறுவதற்கு ஓய்வுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கழிவறை, குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தங்குமிட வசதி : வடக்கு தேரோடும் வீதியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டில் உள்ளது. இதில் 10 சாதாரண அறைகள் உள்ளன, ஒரு அறைக்கு ரூ. 500/- கட்டணம். மேலும், 12 குளிர்சாதன அறைகள் உள்ளது. ஒரு அறைக்கு ரூ. 750/- கட்டணம். ஒரு அறைக்கு இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒரு அறையில் இரண்டிற்கும் மேற்பட்டு கூடுதலாக வரக்கூடிய ஒரு நபருக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் தனி தனியே குழுவாக தங்கும் 2 அறைகளும் உள்ளது. இதில் ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 50/- . இதில் 15 நபர்கள் வரை குழுவாக தங்கலாம்.
கல்யாண மண்டபம் : அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திருமண மண்டபம் ஒன்று சென்னை நெடுஞ்சாலையிலிருந்து திருக்கோயிலுக்கு வரும் வழியில் கட்டப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், டேபிள் சேர், உட்பட திருமண மண்டபத்தின் வாடகை ரூ. 21,000/- வசூலிக்கப்படுகிறது. ஜெனரேட்டர், மின் கட்டணம், எரிவாயு கட்டணம், பராமரிப்பு கட்டணம் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு செலுத்த வேண்டும். மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பின் படி மணமக்களில் ஒருவர் மாற்று திறனாளியாக இருக்கும் பட்சத்தில் திருக்கோயில் திருமண மண்டபத்தின் பராமரிப்பு செலவு ரூ. 2,500 மட்டும் செலுத்தி திருமண மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
துலாபாரம் வசதி : திருக்கோயில் வரிசை வளாகத்தில் துலாபாரம் காணிக்கையாக எடைக்கு நிகராக நாணயங்கள், சர்க்கரை, வெல்லம், கல்கண்டு, முந்திரி, தானிய வகைகள், வாழைத்தார், பழங்கள் போன்ற பொருட்களையும் அன்னதானத்திற்குரிய தரமான அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், வெள்ளி, தங்கம், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களையும் செலுத்தலாம்.
கழிவறை வசதி : திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் பெருந்திட்ட வளாகம், தெற்கு தேரோடும் வீதி, திருக்கோயில் பேருந்து நிலையம், மாரியம்மன் மண்டபம் பகுதிகளில் 101 ஆண்கள் கழிவறை மற்றும் 97 பெண்கள் கழிவறை கட்டப்பட்டுள்ளது, வரிசை வளாகத்தில் ஆண்களுக்கு 4 மற்றும் பெண்களுக்கு 4 கழிவறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
படித்துறை : திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தினை ஒட்டி தெற்கு பகுதியில் சக்தி தீர்த்தம் பெருவள வாய்க்கால் படித்துறை அமைந்துள்ளது. இதில் பூச்சொரிதல் திருவிழா, தேர் திருவிழா, ஆடி பெருக்கு, ஆடி பூரம் ஆகிய நாட்களில் தண்ணீர் சேவார்த்திகளின் வசதிக்காக திறந்துவிடப்படும். ஆடி பெருக்கு, ஆடி பூரம் ஆகிய நாட்களில் தீர்த்தவாரி நடைபெறும்.
திட கழிவு மேலாண்மை : திருக்கோயிலில் சேகரிக்கப்படும் மலர்கள், மாலைகள், எலுமிச்சை மாலைகள், தேங்காய் நார்கள், அன்னதான காய்கறி கழிவுகள், இதர மக்கும் பொருட்களை தரம் பிரித்து இயற்கையாக உரமாக்க ரூ. 7 இலட்சம் மதிப்பீட்டில் ஈச்சம்பட்டியில் இயந்திரம் உபயதாரர் நிதியில் நிறுவப்பட்டுள்ளது. திருக்கோயில் நிலத்தில் சர்வே எண். 48 மற்றும் 51 ல் உள்ள கொய்யா, நெல்லி, மா மரம் போன்றவற்றிற்கு இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மா, கொய்யா கனிகள் பக்தர்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதலுதவி மருத்துவ மையம் : தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2021 - 22 அறிவிப்பு எண். 16ல் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்தறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு படி இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பெருந்திட்ட வளாக முகப்பு பகுதியில் காலை 05.30 முதல் முதல் இரவு 09.00 மணி வரை கட்டணமில்லா மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
தங்கத் தேர் : திருக்கோயிலில் தங்கரத கட்டணமாக ரூ. 1,500/- வசூலிக்கப்படுகிறது. ஒரு கட்டணத்திற்கு அதிகபட்சமாக 5 நபர்கள் கலந்து கொள்ளலாம். தினசரி இரவு 07.15 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். திருவிழாக்காலங்களிலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்கரத புறப்பாடு கிடையாது.
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் : பக்தர்கள் தங்களது காலணிகளை வைப்பதற்கு கட்டணமில்லா காலணிகள் பாதுகாப்பு மையம் தெற்கு ரத வீதியில் இருந்து வரிசை வளாகத்தினுள் நுழைந்ததும் இடது புறம் உள்ளது.
தகவல் மையம் : தகவல் மையம் திருக்கோயிலின் வரிசை வளாகத்தின் உள்ளே உள்ள தகவல் மையத்தில் காணிக்கையாக வரப்படும் வஸ்திரங்கள், பித்தளை இனங்கள், துலாபார காணிக்கைகள் அனைத்திற்கும் உரிய இரசீது பெற்று கொள்ளலாம். மேலும், திருக்கோயில் தொடர்பான கால பூஜைகள், தங்க ரத புறப்பாடு, இதர கட்டணங்களையும், அனைத்து நன்கொடைகள் ஆகியவற்றை தகவல் மையத்திலேயே செலுத்தி உரிய இரசீது பெற்றுக் கொள்ளலாம்.
பொருட்கள் பாதுகாக்கும் அறை : திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தில் அருள்மிகு மாரியம்மன் மண்டபம் செல்லும் வழியில் பொருட்கள் வைப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. புதிய பெருந்திட்ட வளாகத்தில் பொருட்கள் பாதுகாப்பு மையம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
பாலூட்டும் தாய்மார்கள் அறை : திருக்கோயிலின் மேற்கு பிரகாரத்தில் தரிசனம் செய்யும் தாய்மார்களுக்கு தனியாக பாலுட்டும் அறை நிறுவப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.
உடை மாற்றும் அறை : பெருந்திட்ட வளாகத்தில் மாரியம்மன் மண்டபம் பின்புறம் ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கு தனித்தனியாக குளிப்பதற்காக பெரிய தொட்டி அமைக்கப்பட்டு அதன் அருகிலேயே உடை மாற்றும் கொட்டகை பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
கருணை இல்லம் : இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் இத்திருக்கோயிலில் கருணை இல்லம் நடைபெற்று வருகிறது. இங்கு 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட இந்து சமயத்தை சார்ந்த தாய் அல்லது தந்தை இல்லாத 9 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கருணை இல்லம் திருக்கோயில் பணியாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. கருணை இல்லத்தில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம், சீருடை, பாடப்புத்தகங்கள் என அனைத்தும் திருக்கோயில் நிதியிலிருந்து இலவசமாக வழங்கப்படும்.
முடி காணிக்கை வசதி : பக்தர்கள் வசதிக்காக 15,000 சதுர அடியில் வரிசை வளாகத்தில் மாரியம்மன் மண்டபத்திற்கு அடுத்ததாக நவீன வசதிகளுடன் கூடிய மூன்று தளம் கொண்ட முடிகாணிக்கை மண்டபத்தில் 155 நபர்கள் முடி மழிக்க நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாற்று திறனாளிகளுக்கு முடி மண்டபத்தின் தரை தளத்தில் தனி இருக்கை வசதி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது

🙏 சேவைகள் (Services)

அன்னதானம் : அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பெருந்திட்ட வளாகப் பகுதியில் உள்ள மாரியம்மன் மண்டபத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் நடைபெற்று வருகிறது. அன்னதானத் திட்டத்திற்கு பக்தர்களும் நன்கொடை வழங்கலாம், பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் ரூ.1,50,000 / - முதலீடு செய்யலாம். மேலும் மேலே கூறப்பட்ட தொகை ஒரு வங்கியில் டெபாசிட் செய்யப்படும், மேலும் பெறப்படும் வட்டிக்கு வாழ்நாள் முழுவதும் செய்யப்படும். இந்த திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்கள் ரூ .1,50,000 / - டெபாசிட் செய்யலாம். செக் / டிடி மூலம் இணை ஆணையர் / நிர்வாக அதிகாரி, அருள்மிகு மரியம்மன் கோயில், சமயபுரம், திருச்சி - 621 112. பக்தர்கள் நினைவு நாள் / திருமண நாள் மற்றும் பிறந்த நாள், பெற்றோர் இறப்பு ஆண்டு, பக்தர்கள் அன்னதானம் வழங்கலாம், பக்தர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
பிரசாதம் சேவை : திருக்கோயிலில் அம்மனை தரிசனம் செய்து வெளியே வரும் பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் முதலிய பிரசாதங்கள் நாள் முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
Temple Services : திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக பெருந்திட்ட வளாக முகப்பு பகுதியில் காலை முதல் இரவு வரை கட்டணமில்லா மருத்துவ முதலுதவி சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.